5.28.2013



''ஒரு நாட்டின் வளம், காட்டு வளத்தில் அடங்கியுள்ளது என்பதையும் காடுகளின் வளர்ச்சியால் மனித இனம் நன்மை அடைகிறது என்பதையும் உணர்ந்துள்ள எனது தலைமையிலான அரசு, காடுகளைக் காக்கும் கடமையை, கண்ணும் கருத்துமாக ஆற்றி வருகிறது. அந்த வகையில், வளம் மிக்க தமிழ்நாட்டின் வன வளங்களை வலுப்படுத்தும் வகையில், நாட்டுக்கு அழகையும், பொலிவையும் தரக்கூடியதும், மக்களுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடியதுமான வனவிலங்குகளையும், பறவைகளையும் பாதுகாக்க, ஜப்பான் நிதி உதவியுடன் வன உயிரினங்கள் அதிகமாக வாழும் பகுதிகளை இணைத்து புதிதாக நான்கு வன உயிரின சரணாலயங்கள் ஏற்படுத்தப்படும்''
-இது ஏப்ரல் 25 அன்று முதல்வர் ஜெயலலிதா, விதி 110-ன் கீழ் சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு.

ஆனால், ''புதிதாக சரணாலயங்கள் ஏற்படுத்துவது இருக்கட்டும். ஏற்கெனவே இருக்கும் காடுகளையும்... வனவளங்களையும்... யானைகளின் வழித்தடங்களையும் அரசாங்கம், ஆன்மிகம், கல்வி, அரசியல், தொழில், சுற்றுலா என்று பற்பல ரூபங்களில் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் அதற்கு முடிவுகட்டுங்கள்'' என்று பரிதாப கோரிக்கையை எழுப்புகிறார்கள்... பசுமை ஆர்வலர்கள் பலரும்!
அத்தனையையும் வளைத்த ஈஷா?
கோயம்புத்தூரை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது, ஈஷா மையம். தமிழகத்தில் ஆன்மிகப்பணியில் ஈடுபட்டு வரும் முக்கியமான மையங்களில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், ''வனத்துறையின் அனுமதி இல்லாமல், பல கட்டுமானப் பணிகள் ஈஷா மையத்தில் நடந்து வருகின்றன. யானைகளின் வழித்தடங்களை அடைத்து, புதியக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இப்படி அத்துமீறல்கள் செய்து வன உயிரினங்களுக்குக் கேடு ஏற்படுத்தி வருகிறது ஈஷா மையம். அதனால், அந்த மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை சில வாரங்களுக்கு முன் தாக்கல் செய்துள்ளார்.


இதுபற்றி வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் பேசும்போது, ''வனத்துறையின் ஆவணங்களின் அடிப்படையில்தான் ஈஷா நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ளோம்.
வனப்பகுதியின் குறிப்பிட்ட எல்லை வரை, முறையான அனுமதி இல்லாமல் குடிசை கூட போட முடியாது. ஆனால், எந்த அனுமதியும் இல்லாமல் ஈஷா நிறுவனம் பல பிரமாண்ட கட்டடங்களைக் கட்டியுள்ளது. தடையில்லாச் சான்றிதழ் கேட்டு ஈஷா நிறுவனம் 'மலைதளப் பாதுகாப்புக் குழு’வுக்கு மனு கொடுத்துள்ளது. இம்மனு பரிசீலனையில் இருக்கும்போதே, அதைத் திரும்பப் பெற்றுள்ளது ஈஷா மையம்.
இந்த மையம், யானைகளின் வழித்தடங்களை மறித்து, சோலார் மின் வேலிகளை அமைத்துள்ளது. இதைக் கடக்கும் யானைகள் தாக்கப்பட்டு மிரண்டு ஓடுவதால் விபத்துகள் நிகழ்கின்றன.


இப்போது, கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறை, 'புதியக் கட்டடங்கள் கட்ட தடையில்லாச் சான்று வழங்கமுடியாது’ என ஈஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே, 'வனத்துறை அனுமதி இன்றி கட்டப்பட்டக் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். யானைகளின் வழித்தடங்களை மறித்து, அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட விஷயங்களை மையமாகக் கொண்டுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்'' என்று சொன்னார்.


காருண்யாவுக்கும் கருணையில்லை!

தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோயம்புத்தூர் மாவட்டத் தலைவர் பேரூர் கந்தசாமி, ''மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி முழுக்கவே வனத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பலவும் முளைத்துக் கொண்டேதான் இருக்கின்றன.
இவையெல்லாம் வனத்துறையினரின் சம்மதம் இல்லாமல், வளர்ந்திருக்க முடியாது. குறிப்பாக, ஈஷா, காருண்யா போன்ற நிறுவனங்கள் தன்னிச்சையாக அத்துமீறல் செய்திருக்கவே முடியாது. எனவே, இதற்கு உடந்தையாக இருந்த அப்போதைய வன அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், மற்றும் ஊராட்சி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
யானைகளின் வழித்தடத்தில் உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும். வனத்தை ஒட்டிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள், காட்டேஜ்கள், அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், கேளிக்கை விடுதிகள், தொழிற்சாலைகள், மினரல் வாட்டர் கம்பெனிகள் ஆகியவற்றின் நிலப்பரப்பை அளந்து, சுற்றிலும் வன எல்லைக்கல் நட வேண்டும்.
வனத்தை ஒட்டிய பகுதிகளில் இரவு நேர வாகனப் போக்குவரத்தைத் தடை செய்யவேண்டும். குறிப்பாக, உள்ளூர் விவசாயிகள் மற்றும் மலை கிராம மக்களை உள்ளடக்கிய வனக் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, வன ஆக்கிரமிப்புக்களை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வழி வகை செய்ய வேண்டும்'' என்று உருப்படியான யோசனைகளை முன் வைத்தார்!

யானைகள் வழித்தடம் யானைகளுக்கே...

வனவளம் கபளீகரம் செய்யப்படுவதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடுத்திருப்பதோடு, 'வன விதிகளுக்கு மாறாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று தொடர்ந்து போராடி வருகிறார், தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கோயம்புத்தூர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கே. மோகன்ராஜ்.
''கோயம்புத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதிகளை ஒட்டி, முப்பத்தந்தைக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வனம் மற்றும் நகர ஊரமைப்புத் துறைகளின் விதிகளுக்குப் புறம்பாக கம்பிவேலிகள் அமைத்து, கட்டடங்கள் கட்டியுள்ளன. இதனால் யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப்படுவதோடு, வன உயிரினங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எந்த அனுமதியும் வாங்காமல், பல ஆயிரம் கோடி மதிப்பில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வாளையாறு தொடங்கி... கல்லாறு வரையிலான 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டு, நீர் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு, யானைகளின் வழித்தடங்களும் அடைக்கப்பட்டுள்ளன.


வனம் சார்ந்த பகுதியில் கட்டடங்கள் கட்ட வேண்டுமென்றால், 'மலைதளப் பாதுகாப்புக் குழு’ என்ற அமைப்பிடம் அனுமதி பெறவேண்டும். இது மத்திய, மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட ஒரு குழு. இதில் பல துறைகளைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் இருப்பார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் இக்குழுவில் அதிகாரிகள் தவிர, சமூக சேவகர், மலைவாழ் மக்கள் பிரதிநிதி ஆகிய இருவர் உறுப்பினராக இருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், அதிகாரிகளால் மட்டுமே இயக்கப்படும் இக்குழு, பல ஆண்டுகளாக மாற்றி அமைக்கப்படவேயில்லை. அதுவே ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சாதகமாகி விட்டது.

தவிர, நகர ஊரமைப்புத் துறையிடம் அனுமதி பெற்றுதான் இரண்டு தளங்களுக்கு மேல் கட்ட முடியும். ஆனால், எந்த நிறுவனமும் முறையான அனுமதி பெறவில்லை. இதுகுறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விளக்கம் கேட்டு நகர ஊரமைப்புத் துறைக்கு கடிதம் அனுப்பினேன். '35 நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் குறித்த விவரம் தங்களிடம் இல்லை’ என அவர்கள் அனுப்பிய பதில் அதிர்ச்சியைக் கொடுத்தது. ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் பலரும் இந்த அத்துமீறல் நிறுவனங்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கோரி வழக்குத் தொடர உள்ளோம். 'யானைகள் வழித்தடம் யானைகளுக்கே’ என்ற நிலையை ஏற்படுத்தியே தீருவோம். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார் உறுதியானக் குரலில் மோகன்ராஜ்.
பதிலே இல்லை!
இதுபற்றி கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசுவிடம் கேட்டபோது, ''வனத்துறை மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய மலைதளப் பாதுகாப்புக் குழுவிடம் முறையான தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பிறகுதான் வனம் சார்ந்த பகுதிகளில் கட்டடங்கள் கட்ட முடியும். ஆனால், ஈஷா நிறுவனம் எந்தச் சான்றிதழையும் பெறவில்லை. சான்றிதழ் கேட்டு அவர்கள் கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. அனுமதி இன்றி, கட்டடங்கள் கட்டப்பட்டதற்கான விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதற்கும் இதுவரை பதில் வரவில்லை.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் முறையான அனுமதி இன்றி ஈஷா, காருண்யா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் கட்டடங்களைக் கட்டியுள்ளன. இதுகுறித்து 30 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இவ்விஷயத்தை மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கும் கொண்டு சென்றுள்ளோம்'' என்று சொன்னார்.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கருணாகரனிடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ''சட்டத்துக்குப் புறம்பாக, யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி இருந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்று சொன்னார்.
அரசாங்க இயந்திரம் என்பது எப்போதுமே... அதை வழிநடத்தும் தனி மனிதர்களின் பார்வையில்தான் இயங்கும். ஆனால், 'நாடு முழுவதும் மரக்கன்றுகளை நடுகிறோம்... பசுமைப் பணியில் எங்களை மிஞ்ச ஆள் இல்லை' என்று பிரஸ்தாபித்துக் கொள்பவர்களும்...
'பிச்சைக்காரர்களுக்கும் நாங்கள் அருள்கிறோம்... பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே இதற்கெல்லாம் சாட்சி' என்று முழங்குபவர்களும்... தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது முக்கியம்!
'படிக்கிறது ராமாயணம், இடிக்கிறது பெருமாள் கோயில்' என்கிற கதையாக... வனஎல்லையை ஆக்கிரமித்து வேலி போடுவதும்... கட்டடங்களைக் கட்டி யானைகளின் வழித்தடத்துக்கு சமாதி கட்டுவதும்... எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதவையே! சம்பந்தபட்ட நிறுவனங்கள், எங்களுக்கு இயற்கையின் மீதும், மக்களின் மீதும் அக்கறை இருக்கிறது என்று சொல்வது உண்மையென்றால்... 'நாங்கள் எதையும் ஆக்கிரமிக்கவில்லை' என்பதை ஊடகங்களைக் கூட்டி வெளிப்படையாக நிரூபிக்க வேண்டியதுதானே... வனத்துறை தந்திருக்கும் நோட்டீஸுக்கு சரியான பதிலையும் அளிக்க வேண்டியதுதானே!
அதைவிடுத்து, வேறு வேறு ரூபங்களில் பிரச்னையை திசை திருப்பப் பார்த்தால்... அது, அவர்கள் அனைவரும் இத்தனை நாட்களாக செய்து கொண்டிருக்கும் பணிகளைக் கேள்விக்குள்ளாக்கிவிடும்!

இதோ, அந்த நிறுவனங்கள்..!
ஈஷா யோக மையம், வன விதிகளை மீறி கட்டடங்கள் கட்டுவது குறித்து எழுந்திருக்கும் சர்ச்சை குறித்து 'பசுமை விகடன்’ முக நூலில் (ஃபேஸ் புக்) பதிவிட்டிருந்தோம். அதற்கு, 'மாத்ருபூதம் மாது’ என்கிற பெயரில் முகநூலில் இயங்கும் ஒருவர், 'ஈஷா மையத்தை மட்டுமே எதற்காக விகடன் குறி வைக்கிறது. இதுபோல பல நிறுவனங்கள் விதி மீறி கட்டிடங்கள் எழுப்பியுள்ளன. அரசாங்க நிறுவனங்களும் இதில் அடக்கம். அவற்றையெல்லாம் அம்பலப்படுத்துங்கள்' எனக் கேட்டிருந்தார்.
உண்மையில், அந்தப் பதிவில்... 'ஈஷா, காருண்யா உட்பட பல நிறுவனங்கள் விதி மீறல் செய்து கொண்டிருக்கின்றன' என்றுதான் குறிப்பிட்டிருந்தோம். இதோ... விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 35 நிறுவனங்களின் பட்டியல். இதை, தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கோயம்புத்தூர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கே. மோகன்ராஜ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்றிருக்கிறார்.
1. காருண்யா பல்கலைக்கழகம்
2. இவாஞ்சலின் மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்
3. காருண்யா இண்டர்நேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல்
4.   சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல்
5. ஈஷா யோகா மையம்
6. ஈஷா ஹோம் ஸ்கூல்
7. ஈஷா வித்யா மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்
8. தாமிரா ரிசார்ட்ஸ்.
9. கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரி
10. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினீயரிங்
11. கோயம்புத்தூர் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி
12. இண்டஸ் காலேஜ் ஆப் இன்ஜினீயரிங்
13. ஸ்ரீராமகிருஷ்ணா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி
14. அமிர்தா விஸ்வ வித்யாலயம்
15. அமிர்தா வித்யா பீடம்
16. குருவாயூரப்பன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட்
17. ஷான் இன்டர்நேஷனல் பிசினஸ் ஸ்கூல்
18. ஏ.வி.சி.-சரண்யா, ஆர்ய வைத்ய ஃபார்மஸி
19. ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆஃப் கம்யூட்டர் அப்ளிகேஷன் அண்ட் மேனேஜ்மென்ட்
20. தி வெஸ்டர்ன் கேட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல்
21. கோவை கிளப் கோல்ஃப் அண்ட் கன்ட்ரி கிளப்
22. ராகின்டோ டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (1,000 ஏக்கரில், இன்டகிரேடட் ஃபீடர் டவுன்ஷிப் அண்ட் ஐ.டி.செஸ்)
23. வி.எல்.பி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி
24. வி.எல்.பி. ஜானகியம்மாள் பாலிடெக்னிக்
25. ஏ.சி.சி. சிமெண்ட் வொர்க்ஸ்
26. சச்சிதானந்தா ஜோதி நிகேதன்
27. பிளாக் தண்டர் தீம் பார்க் பிரைவேட் லிமிடெட்
28. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
29. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் (பெண்கள்)
30. சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம்
31. அர்ஷா வித்யா குருகுலம்
32. கர்ல் குபேல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட் எஜூகேஷன்
33. ஆயுர்வேத ஹாஸ்பிடல் அண்ட் ஆர்ய வைத்ய ஃபார்மஸி டிரெயினிங் அகாடமி
34. சி.ஆர்.பி.எஃப். (மத்திய ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்)
35. இம்பீரியல் ஸ்பிரிட் அண்ட் வொய்ன்ஸ் பிரைவேட் லிமிடெட்.
'இயற்கையைப் பாதுகாக்க நாங்கள் இருக்கிறோம்...', 'மக்களைப் பாதுகாக்கும் தேவதூதர்கள் நாங்கள்', 'சிறுதுளி பெருவெள்ளமாக இயற்கையைக் காப்போம்' இப்படி பல ரூபங்களில முழங்கிக் கொண்டிருக்கும் பல நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். இவர்கள் எல்லாம் எப்படி இயற்கையைக் காப்பாற்ற முடியும்? இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டியது அரசாங்கம். ஆனால், அந்த அரசாங்கத்தின் நிறுவனங்களும் இதில் இடம் பிடித்திருக்கும்போது... யார்தான் வந்து வனத்தையும் விலங்குகளையும் காப்பாற்றுவார்களோ?!

 மறுப்பு சொல்லும் ஈஷா... கண்டுகொள்ளாத காருண்யா!
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, ஈஷா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோது... சுவாமி அபிபாதா மற்றும் சுவாமி நாகரூபா ஆகியோர், ''இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கில், நாடு முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது, எங்கள் ஈஷா பசுமைக் கரங்கள் அமைப்பு. இப்படி மரம் நடுவதைத் தொடர்ந்து செய்தும் வருகிறோம். அப்படிப்பட்ட எங்கள் அமைப்பு, இயற்கைக்கு எதிரான செயல்களில் எப்படி ஈடுபடும். வனத்தை அழிக்கும் வேலையை, வன உயிரினங்களுக்குக் கேடு செய்யும் வேலையை, ஈஷா ஒரு போதும் செய்யாது. எல்லாமே முறையாகத்தான் நடக்கிறது'' என்றனர்.
''வனத்துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸுக்கு உங்கள் மையத்தின் பதில்?'' என்னவென்று கேட்டோம்.
அதற்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
காருண்யா கல்வி நிறுவனத்துக்கும் வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, கோவையிலிருக்கும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளிடம் பேச முயற்சித்தபோது, ஒருவரும் நமக்கு பதில் தர முன்வரவில்லை. காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். பால் தினகரனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். அந்த முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. தங்களுடைய தரப்பு குறித்து காருண்யா நிறுவனத்தினர் பதில் தெரிவிக்கும்பட்சத்தில் அதையும் பிரசுரிக்கத் தயாராகவே இருக்கிறோம்.


 பசுமை விகடனின் மனு!
யானைகளின் வழித்தடங்களை மறித்தும், வன விதிகளை மீறி கட்டடங்கள் கட்டியும் உள்ள 35 நிறுவனங்கள், எவ்வளவு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளன? எத்தனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளன? போன்ற கேள்விகளுக்கு, வனத்துறை, பொதுப்பணித்துறை, சம்பந்தப்பட்ட கிராம சிற்றூராட்சி, நகர ஊரமைப்புத்துறை, மாவட்ட வருவாய்த்துறை உள்ளிட்ட எந்தத் துறையிடமுமே சரியான விவரங்கள் இல்லை. இதை வைத்துப் பார்க்கும்போது, இந்த அத்துமீறல்களை எந்தத் துறையும் கண்காணிக்கவும் இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது. அதனால், 'மலையிடப் பாதுகாப்புக் குழும’த்திடம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களைக் கேட்டு, 'பசுமை விகடன்’ சார்பாக மனு செய்திருக்கிறோம்.


 புலிகளைப் போல, யானைகளையும் காக்க வேண்டும்!
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மாநில இணைச்செயலாளர் ஜெயச்சந்திரன், ''மனிதர்களின் தாறுமாறான செயல்பாடுகள் காரணமாக 2006 முதல் 2011 வரையிலான 5 ஆண்டுகளில் மட்டுமே கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் 73 யானைகள் பலியாகியுள்ளன. வழித்தடங்கள் அடைக்கப்படும்போது திசை மாறி வரும் யானைகள், ரயிலில் அடிபட்டு பலியான சம்பவங்களும் உண்டு. வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் ஏராளமான காட்டு மரங்கள் காணாமல் போய் விட்டன. அதில் வாழ்ந்த குரங்குகள், காட்டு அணில்கள் மற்றும் பலவிதப் பறவைகளின் வாழ்விடம் கேள்விக்குறியாகி விட்டது. புதர்கள் அடங்கிய புல்வெளிகள் இல்லாமல் போனதால் மான்களும், பழ மரங்கள் அழிக்கப்பட்டு விட்டதால், மயில்களும் விவசாய நிலங்களுக்கு இடம்பெயர்ந்து, சேதம் விளைவித்து வருகின்றன. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது போல், ஏற்கெனவே உள்ள யானைகள் பாதுகாப்புத் திட்டத்தையும் தீவிரமாக்கி, யானைகளைக் காப்பாற்ற வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்தார்!

மாண்புமிகு ‘பிஷ்னோய்’...



மான்களைக் காக்க... மரங்களைக் காக்க...
உயிரையே கொடுக்கும் உன்னத மக்கள்!

மரங்கள் மற்றும் வனவிலங்குகளை வகை, தொகை இல்லாமல் அழித்தொழிக்கும் இன்றையச் சூழலில், அவற்றின் பாதுகாப்பை மட்டுமே தமது தார்மீகக் கடமையாக கொண்டு, அதிலிருந்து துளியும் விலகாது வாழ்ந்து கொண்டிருக்கிறது பழங்குடிச் சமூகம் ஒன்று என்றால்... ஆச்சரியம்தானே! ‘பிஷ்னோய்’ என அழைக்கப்படும் அந்த மக்களின் முக்கியக் கொள்கையே... ‘வனவிலங்குகள் மற்றும் தாவரங்களிடம் அன்பு செலுத்த வேண்டும்’ என்பதுதான்.

இந்தியாவில்... ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பரவலாக உள்ளனர். ராஜஸ்தானில் சூரியன் முதலில் உதிக்கும் நகரம் ஜோத்பூர். மார்வார் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்த இப்பகுதியில் அதிகளவில் வசிக்கிறார்கள் பிஷ்னோய் மக்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு ஜோத்பூருக்குச் சென்றோம்.
சமீபகாலத்தில் இப்பகுதியைப் பிரபலமாக்கியவர்... பாலிவுட் நடிகர் சல்மான்கான். காரணம்...? அங்கே அவர் நடத்திய மான்வேட்டை. இதன் காரணமாக வனவிலங்குச் சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பாய்ந்தது. இதற்கு காரணமாக இருந்ததே... இந்த பிஷ்னோய் மக்கள்தான்!

1485-ம் ஆண்டில் குரு ஜம்பேஷ்வர் என்பவரால் வழிநடத்தப்பட்ட இந்த சமூகம், சுத்தம், அன்பு, அகிம்சை, விலங்-குகளுடன் நேசம், மரங்களுடன் பாசம்... என 29 நல்வழிகளை தார்மீகக் கடமையாகக் கொண்டிருக்கிறது (‘பிஷ்னோய்‘ என்றால் இருபத்து ஒன்பது என்றும் ஓர் அர்த்தம் உண்டு).

குரு ஜம்பேஷ்வர்தான் இச்சமூகத்தின் கடவுள். ஜோத்பூரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, ‘பாக்தா கீ தனி’ என்கிற கிராமத்தை அடைந்தோம். அங்கு சிங்காரா மான்கள், பிஷ்னோய் சமூகத்தினரின் வீட்டு விலங்குகள் போல், அச்சமில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தன. முப்பது வீடுகளே இருக்கும் அக்கிராமத்தின் முக்கியத் தொழில்கள்... விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. 


ஷியாம் பிஷ்னோய் என்பவரிடம் பேசியபோது, இங்கே இருக்கும் விலங்குகள், மரங்கள் அனைத்தையும் எங்களின் குழந்தைகளாகவேதான் பார்க்கிறோம். மான்குட்டிகளுக்கு தங்களின் மார்பிலிருந்து தாய்ப்பால் கொடுக்கும் அளவுக்கு அவற்றுடன் நெருங்கி வாழ்ந்து வருகிறார்கள் இங்குள்ள பெண்கள்.

இதோ... 

கிரணிடம் கேட்டுப் பாருங்களேன் என்றபடி தன் மனைவியை அறிமுகப்படுத்தினார்.

‘‘நான் கூட மான்குட்டிகளுக்கு பாலூட்டியிருக்கிறேன். தாய் மான் இறந்து விடும்போது, அதற்கு வேறு மான்கள் பாலூட்டு-வதில்லை. இந்தக் குட்டியும், வேறு மானிடம் பால் குடிக்காது. இந்த நிலையில் அந்த அநாதைக் குட்டிகளை வாழ வைப்பதற்காக...

மரத்தடியில் ஒருவன்

 

 


மத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.

மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.

“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த
களைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக் கொண்டே சென்றான்.

அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்

“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல
தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும்
அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.

மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.

“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது
அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்
என நினைத்துக்கொண்டே சென்றான்.

சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.

இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த
ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால்
இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி
விட்டு சென்றார்.

"நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே"

தாய்







இயற்கை தாய்!
உயிர்களனைத்தும்
அவள் பிள்ளைகள்!


பறவை

பறவை





 

 பூமியைச் சூடாக்குறது நீங்க

வெந்து சாகுறது நாங்களா..?!

- பறவை