7.13.2012

வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு சில வழிமுறைகளை கூறியுள்ளார் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார். அவர் கூறும் வாழ்க்கை முறை இதுதான்...

 1. சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்துவிட வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளை தியானம் செய்ய வேண்டும்.

 2. இயற்கைக் கடன்களை கழித்த பின் செவிகள், கண்கள், நாசி, வாய், தொப்புள் ஆகியவற்றில் உள்ள அசுத்தங்களையும், கை, கால் போன்ற உறுப்புகளில் உள்ள அழுக்குகளையும் வெந்நீரால் தேய்த்து சுத்தமாகக் கழுவ வேண்டும். பின்னர், வேலங்குச்சி, ஆலம் விழுது கொண்டு பல் தேய்த்து, அதைத் தொடர்ந்து கரிசலாங்கண்ணி கீரைத்தூள் கொண்டு, உள்ளே சிறிது சாறு போகும்படி பல் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். 

3. அதன்பிறகு, கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுவளை, முசுமுசுக்கை இலை சேர்ந்த கலவை கால் பங்கு, சீரகம் கால் பங்கு இவற்றை ஒன்றாகச் சேர்த்து பொடியாக தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்த பொடியில் ஒரு கிராம் எடுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்க்க வேண்டும். இன்னொரு டம்ளரில் பசும்பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு டம்ளர் திரவத்தையும் ஒன்றாகக் கலந்து நன்கு கொதிக்க வைத்து, ஒரு டம்ளராக சுண்டிய பின், அதில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.

  4. காலை வெயில் உடலில் படாமல் இருக்க மேல்சட்டை அணிய வேண்டும். 

5. ஒன்றரை மணி நேரம் கழித்து, வெயிலில் மிதமான உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். பின்னர், இளம் வெந்நீரில் குளிக்க வேண்டும். சிறிது நேரம் கடவுளை வணங்க வேண்டும். 

6. பசி எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது அள்ளிப் போட்டுக் கொள்ளக் கூடாது. சாப்பிட்டபின் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும்.

 7. கிழங்கு வகைகளை உண்ணக் கூடாது. ஆனால், கருணைக் கிழங்கை உண்ணலாம். பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம் ஆகியவற்றை உட்கொள்ளலாம். பதார்த்தங்களில் புளி, மிளகாய் ஆகியவற்றை குறைவாகவும், மிளகு, சீரகம் ஆகியவற்றை அதிகமாகவும் சேர்க்க வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. உப்பை குறைவாக சேர்த்துக் கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தாளிப்பதற்கு நல்லெண்ணெய் உபயோகிக்கலாம். அல்லது, பசு வெண்ணெயால் தாளிக்கலாம். 

8. கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், புடலங்காய், கொத்தவரைக்காய் ஆகியவற்றை கறி செய்வதற்கு உபயோகிக்கலாம். முருங்கை, கத்தரி, பேயன் வாழைக்காய் ஆகியவற்றை அடுத்தடுத்து கறி செய்யலாம். மற்றவற்றை எப்போதாவது செய்ய வேண்டும்.

 9. சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் போன்ற சித்திரான்னங்களை அடிக்கடி சாப்பிடக் கூடாது. எப்போதாவது சாப்பிடலாம். 

10. புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளலாம். 

11. பருப்பு வகைகளில் துவரம் பருப்பை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். மற்ற பருப்பு வகைகளை எப்போதாவது சேர்த்துக் கொள்ளலாம். 

12. விருந்து என்றாலும் சற்று குறைவாகவே உண்ண வேண்டும். 

13. வெந்நீரையே குடிக்க வேண்டும். 

14. மாலை வெயில் உடலில் படுமாறு சற்று நடக்க வேண்டும். காற்று அதிகமாக இருந்தால், திறந்த வெளியில் நடக்கக்கூடாது. வெயில், பனி, மழை ஆகியவை உடலில் படுமாறும் நடக்கக் கூடாது. 

15. இரவின் தொடக்கத்தில் முகம், கை, கால் ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின், தியானம் செய்யலாம். மந்திரங்கள் சொல்லி கடவுளை வணங்கலாம். நல்ல புத்தகங்கள் படிக்கலாம். வீட்டு விவகாரங்கள் பற்றி பேசலாம். 

16. பிறகு இரவு உணவை உட்கொள்ள வேண்டும். பகலில் எந்த அளவுக்கு சாப்பிட்டீர்களோ, அதில் அரைப்பங்கு அளவே இரவு உண்ண வேண்டும். 

17. இரவில் கீரை, தயிர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு வகைகளை உண்ணக் கூடாது. சூடான பதார்த்தங்களையே உண்ண வேண்டும். 

18. இரவு சாப்பாடு முடிந்து 2 மணி நேரத்துக்குப் பின் பசும்பாலைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். 

19. பெண்களுடன் உடலுறவு கொள்ளும் நாட்களில், அதற்கு ஒரு மணி நேரம் முன்பிருந்து உடலுறவைப் பற்றி எண்ணாமல், அதன் பின் உறவு கொள்ள வேண்டும். ஒரே இரவில், ஒரு முறைக்கு மேல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

 20. உடலுறவு முடிந்தபிறகு உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு கடவுளை தியானம் செய்து, அதன்பின் உறங்க வேண்டும். 4 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு வைத்துக் கொள்வது அதமம். 8 நாட்களுக்கு என்றால் மத்திமம்.
15 நாட்களுக்கு ஒருமுறை என்றால் உத்தமம்.

 21. படுக்கும் போது இடது கைப் பக்கமாகவே உறங்க வேண்டும். 

22. கொலை, கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் போன்றவை கூடாது.

 23. கத்திப் பேசுதல், வேகமாக நடந்து செல்லுதல், ஓடி நடத்தல், வழக்குப் போடுதல், சண்டையிடுதல் போன்றவை கூடாது. 

24. பதற்றம் அதிகரித்தால் பிராணவாயு அதிகமாக செலவாகும். அதனால், பதற்றம் கூடாது.

 25. நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு, வெந்நீரில் குளிக்க வேண்டும். அல்லது, வாரத்துக்கு ஒருமுறை காய்ச்சிய நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு முழுக வேண்டும்.

 26. புகை, கஞ்சா, கள், சாராயம், போன்ற போதை தரும் பொருட்கள் கூடாது.

 27. மாதத்துக்கு ஒரு முறை அல்லது 6 வாரத்துக்கு ஒரு முறை பேதிக்கான மருந்தை உட்கொள்ள வேண்டும்.  - இப்படி வாழ்வதுதான் நல்லது என்கிறார் வள்ளலார்.


அழுவதற்கும் முடியாமல்
அழுகின்றேன் அம்மா
உன் தூய மகன் கருவறையைத்
தொழுகின்றேன் அம்மா

என் இனத்தை எழுப்புதற்கே
இனிய மகன் பெற்றெடுத்தாய்
இன்று
எழ முடியா நோய்தன்னை
எதற்கம்மா தத்தெடுத்தாய்?

ஈரய்ந்து மாதந்தான்
உன் பிள்ளை
உன் வயிற்றில் இருந்தான்
பின்பு, ஈழத் தாய் பெற்றெடுக்க
காடென்னும் கருவறைக்குள்
கன காலம்
கன காலம் கரந்தான்

தமிழருக்கே தெரியாமல்
தமிழருக்கே உழைத்தான்
தன் தம்பி தன் தங்கை
தமிழீழம் தனைக் காண
தன்னோடு களமாட அழைத்தான்
தம் நண்பர் கயமைக்கும்
தகவில்லார் சிறுமைக்கும்
தப்பித்துத் தப்பித்தே உழைத்தான்

சிறு துளியும் கறை சொல்ல 
முடியாத வெள்ளை 
எம் வேர்த் தமிழின்
சீர் மீட்கக் கருவான பிள்ளை

என் தந்தை என் அன்னை
என் பிள்ளை என்றே
எப்போதும் எப்போதும்
இவன் பார்த்ததில்லை

அவருக்குச் சொத்தாகத்
தப்பாகத் தப்பாகத்
துளியேனும் முறை மீறிப்
பொருள் சேர்த்ததில்லை

அத்தனைத் தாய்க்கும்
மகனாய் இருந்தான்
அத்தனைச் சேய்க்கும்
அன்னையாய்ச் சிறந்தான்

புலம்பெயர்ப் பிள்ளைகள்
புத்திக்குள் போனவன்
அவர்தம் பொறுக்கா குளிருக்கும்
போர்வையாய் ஆனவன்

இணையிலா இசையினில்
ஈடிலா ஆடலில்
எம் இனப் பிள்ளையை
ஈடுபடுத்தினான்

இடையறா முயற்சியால்
இடை விடா பயிற்சியால்
உடல்களில் உயிர்களில்
உயிர்த் தமிழ் ஊறிய
உளவியல் உளவியல்
மேடை நடத்தினான்

நம்முடன் வாழ்ந்தவன்
நமக்கென வாழ்ந்ததை
நாமா நாமா
நன்கறிந்தோம்

நா கூசாமல் கூசாமல்
நல்ல அத்தமிழனை
வன்முறையாளனாய்
வாய் குழறிப் பேசியே
வரலாற்றில் பெயரிழந்தோம்

தாய்மொழி அறியாத
தலைமுறை ஒன்றிங்கு
தலைவரை உணர்ந்து எழும்
அன்றுதான்
தக தக தக தக
தக தக தக வென
தமிழினம் உயர்ந்து எழும்

தன் பிள்ளை சொகுசாகத்
தப்பித்துப் போக
ஊர்ப்பிள்ளை வைத்திங்கா களமாடினான்?
போடா போடா
அவன் பிள்ளை களமாடி அழியாத புகழ்சூடி
மாவீரர் பட்டியலில் படமாகினான்

தாய்த் தமிழ்நாட்டில்
வாழ்ந்த தன்
தாயையும் தந்தையையும்
அவசரமாய் அழைத்தாங்கே
குடியேற்றினான்

மனிதமற்ற கயவர்களின்
மரண நெடி நாட்களிலே
அவர்களையும் மக்களுடன்
அலையவிட்டு அலையவிட்டு
அன்பு மகன் அதிலேயும் பழி மாற்றினான்

என்னதான் குறை சொல்ல முடியும்
அம்மா உன் பிள்ளையை
என்றுதான் எவர் வெல்ல முடியும்
இல்லையென்றா இவர் கணக்கு முடியும்
உன் பிள்ளை இல்லையென்றால்
இல்லையென்றால்
இல்லை
என்றால் எங்களுக்கு எப்படித்தான்
இக் கிழக்கு விடியும்

வல்வெட்டித் துறையிலங்கே
வாடிக் கிடப்பவளே
உன் கண் முட்டும் கண்ணீரைக்
கை நீட்டித் துடைக்கின்றோம்
தலைவர்க்குப் பால் கொடுத்த
மார்புகளின் பசி வாங்கித் துடிக்கின்றோம்

ஆயிரம் மருத்துவர்கள்
அம்மா உன் அருகிருந்துத்
தீவிர சிகிச்சைதன்னைச்
சிறப்பாகச் செய்வதற்கு
ஆவலாய்க் காத்திருந்தும்
அறமற்றக் கயவர்களின்
அணை தாண்ட முடியாமல்
அடி மனசில் அடி மனசில்
அய்யோ வெடிக்கின்றோம்

சிங்களரும் உனைத் தேடி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறார் அம்மா
உன் சிறந்த மகன் தூய்மைக்குச் 
சிறிதேனும் இணங்குகிறார்

உறவான தாய்த் தமிழர்
ஊமையாய்ப் பார்த்திருப்போம்
உறவற்ற எவர்களையோ
அன்னையென்றும் அம்மையென்றும்
அனுதினமும் தோத்தரிப்போம்

முள்வேலிக் கம்பிக்குள்
உம் காயங்கள் கொத்திக்
கண்ணீரில் பசியாறிக்
கடல் தாண்டி வந்த
அந்தக் காகங்கள்
உம் கதையைக் 
கதறி உரைக்கிறதே

ஏமாறச் சம்மதித்து
எவருக்கும் தலையாட்டும்
எந்திரமாய் ஆனதனால்
எம் சனங்கள் உம் துயரை
உமியளவும் உணராமல்
உறங்கிக் கிடக்கிறதே

உலக அற மன்றம்
ஒரு கேள்வி கேட்கலையே
உம் உரிமைக்குத் தடை நீக்க
ஒரு நீதி வாய்க்கலையே

ஒன்று மட்டும் உறுதியம்மா...
ஈழக் கதவுகளை
என் தாயே என் தாயே
உன் மகன்தான் உன் மகன்தான்
திறப்பான்
உன் ஈர விழியருகில்
என் தாயே என் தாயே
மிக விரைவில் உன் பிள்ளை
உன் பிள்ளை இருப்பான்

- அறிவுமதி.

கொலை வாளினை எடடா! - பாவேந்தர் பாரதிதாசன்



வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?
உலகாள உனதுதாய்மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா!

கலையேவளர்! தொழில்மேவிடு!
கவிதைபுனை தமிழா!
கடலேநிகர் படைசேர்கடு
விடநேர்கரு விகள்சேர்!
நிலமேஉழு! நவதானிய
நிறையூதியம் அடைவாய்;
நிதிநூல்விளை! உயிர் நூல்உரை
நிசநூல்மிக வரைவாய்!

அலைமாகடல் நிலம்வானிலுன்
அணிமாளிகை ரதமே
அவைஏறிடும் விதமேயுன
ததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர்
குணமேவிய தமிழா!

தலையாகிய அறமேபுரி
சரிநீதி யுதவுவாய்!
சமமேபொருள் ஐனநாயகம்
எனவேமுர சறைவாய்!
இலையேஉண விலையே கதி
இலையேஎனும் எளிமை
இனிமேலிலை எனவேமுர
சறைவாய் முரசறைவாய்!

- பாவேந்தர் பாரதிதாசன்