3.01.2013

என்எல்சி உருவாக வித்திட்ட ஜம்புலிங்கம்..

நெய்வேலி : என்எல்சி உருவாக வித்திட்ட ஜம்புலிங்கம் முதலியாரின் வெண்கல சிலை நெய்வேலியில் திறக்கப்பட்டது. கடலூர், பண்ருட்டி அருகே திருகண்டேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த ஜம்புலிங்கம் முதலியார்  தனது வயலில், 1934ம் ஆண்டு ஆழ்துளை கிணறு தோண்டும் போது நிலக்கரி தண்ணீருடன் வெளியேறுவதை கண்டார். அதை ஆங்கிலேய அரசின் நிலயியல் துறைக்கு தெரிவித்தார். சரியான நேரத்தில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவாக காரணமாக அமைந்தது.

மேலும் தனது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங் களை தானமாக வழங்கியதுடன், அவரது முயற்சியின் மூலம் அப்போதைய சென்னை மாகாண முதல் வர் காமராஜ், பொறியாளர் கோஷ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் 1953ம் ஆண்டு மார்ச் 5ம் நாள் என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. அவரை கவுரவப்படுத்தும் வகையில் நெய்வேலியில் உள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.


நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உருவானதே ஒரு சுவரஸ்யம்...
1934-ம் ஆண்டு, ஜம்புலிங்க முதலியார், தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டும்போது... கருப்பு நிற திரவப் பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதிசயப்பட்டுப் போனவர், அன்றைய ஆங்கிலேயே அரசின் புவியியல் துறை கவனத்துக்கு அனுப்பி வைத்தார். அப்போதுதான், பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அன்றைய தென்னாற்காடு ஜில்லா, கடலூர்- பண்ருட்டி நெடுஞ்சாலையில் உள்ள திருகண்டேஸ்வரம் கிராமத்தில் பிறந்த ஜம்புலிங்கம், பெரும் நிலக்கிழாராக திகழ்ந்தவர். கடலூர் நகர்மன்றத் தலைவர், தென்னாற்காடு ஜில்லா வாரிய உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் மற்றும் ரயில்வே வாரிய உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் 30 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.

நிலக்கரி விஷயத்தை ஆங்கிலேயர்கள் அத்தோடு விட்டுவிட, நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அப்போது முதல்வராக இருந்த காமராஜரின் கவனத்துக்கு நிலக்கரி பற்றிய தகவலை கொண்டு போனார் ஜம்புலிங்கம். அதன் பிறகுதான் மத்திய அரசு இங்கே நிலக்கரி சுரங்கத்தை அமைத்தது. இதற்காக தனக்குச் சொந்தமாக இருந்த சுமார் 600 ஏக்கர் விவசாய நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார் ஜம்புலிங்கம்.

இன்றைக்கு 'என்எல்சி' என்கிற பெயரில் பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கை அளித்துக் கொண்டிருக்கிறது அந்த நிலக்கரி நிறுவனம். நாடு முழுக்க மின்சாரத்தை தந்து ஒளிவெள்ளம் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது. இதற்காக நிலம் தந்த ஜம்புலிங்கத்துக்கு 2-ம் சுரங்க வாயிலில் சிலை அமைத்தனர். போதிய பராமரிப்பின்றி சிலை சிதைந்து போக... நெய்வேலி இரட்டைப் பாலத்தின் மீது முழுவுருவ வெண்கல சிலை தற்போது நிறுவப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜம்புலிங்கத்தின் மகள் வழி பேரனான அமரன், உள்ளிட்ட உறவினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்கள் வைத்த கோரிக்கைதான் பரிதாபகரமானது. தற்போது கடலூரில் வசித்து வரும் அவர்கள், ''நாங்கள் தற்போது நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் பிள்ளைகள் நன்கு படித்துள்ளனர். அவர்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வேண்டும் என்று இதுவரை நாங்கள் கோரவில்லை. நீங்களாக வழங்கினால் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்'' என்று வாய்விட்டு கேட்டே விட்டனர்.

இதைப் பற்றி நேரடியாக பதில் எதையும் தரவில்லை என்எல்சி நிறுவனத்தின் இயக்குநர். அதனால், நிருபர்கள் இதைப் பற்றி கேட்க, ''மனு கொடுத்தால் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று வழக்கமானதொரு பதிலை தந்துவிட்டு நகர்ந்திருக்கிறார்.

ஜம்புலிங்கம் போலவே பல பேர் இந்த நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்காக தங்களின் விளைநிலங்களை கொடுத்துள்ளனர். சிலர் தானமாகக் கொடுக்க, பலர்... அன்றைய சூழலில், ஏதோ அரசாங்கமாக பார்த்துக் கொடுத்த பிச்சைக் காசைப் பெற்றுக் கொண்டு தங்களின் நிலத்தைக் கொடுத்து வெளியேறினர். இப்படி நிலம் கொடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள்... இன்றைக்கு பரிதாப நிலையில்தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டுள்ளனர்.

உதாராணமாக நெய்வேலி பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதியின் வளர்ச்சிக்காக தன்னுடைய ஏக்கர் கணக்கிலான விளைநிலத்தைக் கொடுத்தவரின் வாரிசுகள்... தங்களின் பிள்ளைகளை பெரிதாக படிக்க வைக்கவோ... சிறப்பாக மணம் முடிக்கவோ முடியாமல் குடிசை வீட்டில், குக்கிராமத்துக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவுக்கே பெருஞ்செல்வமாக இருக்கிறது நெய்வேலி. இத்தகைய நெய்வேலி உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வாரிசுகள், இன்று வேலை கேட்கும் நிலையில் இருக்கின்றனர். ஆனால், அரசாங்க இயந்திரம்... இயந்திரத் தனமாகவே பதில் தந்து கொண்டிருக்கிறது!

இப்படியே இந்தியாவை வளர்த்தெடுத்தால், வல்லரசாகலாம். ஒரு நாளும் நல்லரசாக முடியாது!